வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம்; 188 பேர் உயிரிழப்பு

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகே ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 188 பேர் உயிரிழந்ததுடன், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

கராகஸ் மற்றும் அருகிலுள்ள கடற்கரை நகரமான லா குவைராவில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உதவி கோரி அலறும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து சில வினாடிகளிலேயே 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களும் பூமிக்கு மிக அருகில் ஏற்பட்டதால் சேதத்தின் தீவிரம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

 

இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள், சேதமடைந்த மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களில் தங்க அச்சமடைந்து, திறந்தவெளிகளிலும் வீதிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *