மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு; ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.

 

கல்லடி திருச்சொந்தூர் ஆலய சந்நிதான மண்டபத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் ‘உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்’ எனும் தொனிப்பொருளில் இம் மாநாடு கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பொன். பாலசுந்தரநாதன் (வேல்நம்பி), சிறப்பு அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், இந்து கலாசார அலுவலக திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன், அகண்ட தமிழ் உலகம் பொதுச் செயலாளர். ஏ.தண்டாயுதபாணி, தழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரத்தினம் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

அதேவேளை சிறப்பம்சமாக, ஈழத்து தமிழ் உலகினைக் கவர்ந்த கம்பவாரதி ஜெயராஜ கலந்து கொண்டு ‘ஒரு நூல்’ எனும் தலைப்பில் விசேட ஆழமான சிறப்புரையை ஆற்றவுள்ளார்.

 

இம் மாநாடானது திருக்குறள் ஆய்வுகளை செழுமைப்படுத்தும் நோக்கில் இரு முக்கிய அமர்வுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. இந்த இரு அரங்குகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களினால் திருக்குறள் சார்ந்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

 

மாநாட்டிற்காக இலங்கையின் கிழக்கு, வடக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பல்வேறு பாகங்களிலிருந்தும் பல்துறை சார்ந்த அறிஞர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இலங்கையில் முதன்முறையாக திருக்குறளுக்கு தனது சொந்த மொழிநடையில், சுமார் 1450 பக்கங்களைக் கொண்ட பிரம்மாண்ட உரைப்புத்தகத்தை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்த முனைவர் மனோன்மணி; விசேடமாகக் கௌரவிக்கப்படவுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வையும் ஆழமான சிந்தனைகளையும் உருவாக்கும் நோக்கில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக திருக்குறள் புத்தகம், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

 

மட்டக்களப்பில் இடம்பெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குறள் மாநாடானது, இப்பகுதி பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் திருக்குறள் பற்றிய உன்னதமான அறிவையும், ஆழமான வாழ்வியல் சிந்தனைகளையும் விதைப்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *