மட்டக்களப்பில் இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணித் தாய் டெங்கு காய்ச்சலினால் சிகிச்சைப் பலனின்றி நேற்று(25) இரவு உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில், இந்த வருடம் இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார்.

 

மட்டு போதனா வைத்தியசாலையில் இன்று(26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மகப்பேறு வைத்திய நிபுணர் சி. சரவணன், மற்றும் வைத்திய நிபுணர்கள் மயக்க மருந்து நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதன் போது வைத்திய பணிப்பாளர் கலாரஞ்சினி இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயது இளம் தாய் கடந்த 17ம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர் அவர் 7ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் அவருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் 18 ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்திய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் அவர் 21ம் திகதி சுகப் பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு தொடர்ந்து இரத்த போக்கு ஏற்பட்டதனால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு சுமார் 12 பைந் இரத்தம் ஏற்றப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த போதும் டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்கு வராத நிலையில் அவரின் இருதயம், மூளை மற்றும் சிறுநீரகம் செயலிழந்து கொண்ட நிலையில் அவர் 25 ம் திகதி இரவு 10.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

எனவே டெங்கு நோயால் இந்த ஆண்டில் மரணித்த முதலாவது இளம் தாய் ஆவார் என தெரிவித்தார்.

 

இதேவேளை வாழைச்சேனை போத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான பட்டதாரியான மோகன் ஜெயபிரியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *