ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக பொதுச்செயலாளர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டு கொக்கட்டிச்சோலையில் இன்று(27) பத்மநாபா அறிவியல் கழகத்தின் தலைவர் வினோகாந்தன் தலைமையில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.
பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இந்த நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் பிரதம அதிதிகளாக கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் திரேஸ்குமார், பிரதி தவிசாளர், வைத்தியர் மாதவன், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வெருகல் படுகொலை, காத்தான்குடி படுகொலை அரந்தலாவ படுகொலை உள்ளிட்ட பல்வேறு கொடூரமான படுகொலைகளில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும், தியாகிகளையும் நினைவு கூர்ந்து சுடரேற்றி, மலர் தூவி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் 120 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக பணம் வழங்கி வைத்ததுடன் இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 4 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக தலா 15.000 ஆயிரம் ரூபாவும் மடிக்கணிணி மற்றும் ஒலிப்பதிவு கருவிகளையும் இவர்களின் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்யும் வரை இவர்களுக்காக மாதாந்தம் பணம்; முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் இளையோரின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் முகமாக நான்கு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

