கிளிநொச்சியில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருக்கோயிலின் திறப்பு விழா, நேற்று (12) கிளிநொச்சியில் உள்ள கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

 

கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ஜி.பி. குழுமத்தின் தலைவரும் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கியவருமான கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோசம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

 

மேலும், தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ வி. மகாலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

அத்துடன், ஓய்வுநிலைப் பேராசிரியர்கள், அகில இலங்கை கம்பன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நிகழ்வின் போது திருவள்ளுவரின் அறவுரைகள் மற்றும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் பெருமை குறித்து உரைகள் இடம்பெற்றதுடன், திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *