மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது.

 

இதன் போது பாசிக்குடா மற்றும் அதனைச் சூழவுள்ள 10 கிலோமீற்றர் சுற்றளவிலான பிரதேசங்களை சுற்றுலா அபிவிருத்தி செய்வதன் அவசியம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினூடாக மேற்கொள்வதற்கு தேவையான கலந்துரையாடல் சீப்பா நிறுவன அதிகாரி கலாநிதி எஸ். தயானந் மற்றும் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சஜித் தெளிவூட்டினார்.

 

மேலும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை திட்டமிட்ட முறையில் மேம்படுத்துவதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை இத்துறையில் இணைத்துக் கொண்டு வேலைவாய்ப்புகளையும் வருமான வாய்ப்புகளையும் அதிகரிப்பது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

மேலும் சமூக அடிப்படையிலான சுற்றுலா, கடல்சார் சுற்றுலா வளங்களைப் பயன்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், உள்ளூர் தொழில் முனைவோருக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

 

பாசிக்குடா பிரதேசத்தில் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்ட சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு நிதி மற்றும் சமூக நன்மைகளை அதிகரிப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுடன் இதன் போது கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், விதாதா உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *