கலைஞர் சுவதம்” வேலைத்திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் “கலைஞர் சுவதம்” திட்டத்தின் கீழ், மூத்த கலைஞர்களைக் கௌரவித்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.

 

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் திறமையான கலைஞர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களைச் சந்தித்து கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

 

இம்முறை கெளரவிப்பதற்காக பெயரிடப்பட்ட நால்வரில் முதற்கட்டமாக வாழைச்சேனை-04, வை.எம்.எம்.ஏ.குறுக்கு வீதியில் வசிக்கும் ஏ.எச்.ஹுஸைன் மற்றும் வாழைச்சேனை-04, கொமைனி வீதியில் வசித்துவரும் யூ. அஹமட் (அதிபர்) ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.

 

பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம். நியாஸ் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திலீபா சிவரூபன் ஆகியோரும் கலந்துகொண்டு, கலைஞர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி அவர்களின் கலைப் பணிக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

 

கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாப்பதிலும், கலைஞர்களின் அர்ப்பணிப்பை சமூகத்தின் முன் கௌரவிப்பதிலும் இத்திட்டம் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *