இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
சிலாபம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதியில் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

