கொஸ்லாந்தையில் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை

கொஸ்லாந்தை, அலுத்வெல பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இரகசியமாகப் பயிரிடப்பட்டிருந்த பாரிய கஞ்சாத் தோட்டமொன்றை பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவினர் நேற்றைய தினம் (10) வெற்றிகரமாக முற்றுகையிட்டுள்ளனர். பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையின் போது சுமார் 5 அடி உயரம் வரை செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த பெருமளவிலான கஞ்சாச் செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பயிர்ச்செய்கையின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என பொலிஸாரால் மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகளையும் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *