மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின்போது வெடிக்க வைக்கப்பட்ட வெடி உடனடியாக வெடிக்காத நிலையில், அதனைப் பார்வையிடச் சென்ற 13 வயது சிறுவன் வெடி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11) இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான் கூளாக்காடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு பூஜை வழிபாடுகளின்போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த வெடி உடனடியாக வெடிக்காததால் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி வீசியுள்ளனர்.
இவ்வாறு வீசப்பட்ட வெடியை பார்வையிடுவதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

