மலையக மாணவர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்க மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பிரதிநிதிகள் நேரில் எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது, பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், கல்வித்துறையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு நேற்று (11) வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இக்கலந்துரையாடலில் மன்றத்தின் தலைவர், போஷகர்கள், பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மலையகப் பகுதிகளின் கல்வி நிலைமை தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி அபிவிருத்தியை மேலும் வலுப்படுத்துதல், அங்குள்ள பாடசாலைகளில் காணப்படும் கல்விசார் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி வளங்களின் குறைபாடு, மாணவர்களின் இடைவிலகல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மன்றத்தின் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
