நாட்டுக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகிச் செல்வதால், அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

