“வளமான நாடு – அழகான வாழ்வு : புத்துயிர்க்கும் புதுநகரம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை வந்தாறுமூலை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சான்றிதழ் வழங்கி வைப்பும், விழாவின் நிறைவு அம்சங்களையும் மையப்படுத்தி இந்நிகழ்வுகள் கோலாகலமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.
விழாவின் சிறப்பம்சமாக, கலை நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அத்துடன், ஏறாவூர்பற்று பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு. மு.முரளிதரன், உப தவிசாளர் திரு.சர்வானந்தன், பிரதேச சபை உறுப்பினர்களான திரு.த.பிரபாகரன், திரு.சி.வவானந்தன், திரு.அ.நிதர்சன், திரு.ந.திவாகர், திரு.வேல்பரமதேவா, திரு.சிவானந்தன், திரு.உதயராஜ், அன்வர் சாதிக், சபூர்தீன் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

