சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே அனோஜன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து, அவரது குடும்பம் நலமாக வாழ்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு மதுபோதையில் வந்த ஒருவர், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹிரு செய்தியாளரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர், அங்கிருந்த செய்தியாளர்களை அச்சுறுத்திய பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

