தொடரும் அடை மழை காரணமாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குத் கீழ்மட்டத்தில் உள்ள கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் கூறினார்.
கடந்த 24-ஆம் திகதி மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் 126 மில்லிமீட்டர் மழையும், காசல்ரீ நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 97 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கமும் தற்போது வான் பாயும் கொள்ளளவை எட்டியுள்ளது.
மேலும் நீர்த்தேக்கதத்தின் நீர் சேகரிக்க முடியாத நிலையில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாழ் நிலக் பகுதியிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களின் வழிந்தோடும் கதவுகள் திறக்கப்பட்டதால் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

