ஆசிய விளையாட்டு 2026 பெட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியின் ஆடவர் இரட்டையர் பட்டத்தை தக்கவைக்கும் முயற்சி தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
ஐச்சியில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி, தாய்லாந்தின் உலகத் தரவரிசை 36-வது இடத்தில் உள்ள பக்கபோன் தீரரட்சாகுல்–பீராட்சாய் சுக்புன் ஜோடியிடம் 12-21, 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
ஹாங்சோ 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற சாத்விக்–சிராக், அந்தப் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்தனர்.
முதல் கேமில் சாத்விக்–சிராக் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-12 என எளிதில் வென்றனர். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து ஜோடி சிறப்பாக விளையாடி 11-9 என இடைவேளையில் முன்னிலை பெற்றது.
இந்திய ஜோடி பின்னர் போராடியபோதும், 21-19 என இரண்டாவது ஆட்டத்தை இழந்தது. தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்தில் 6-6 வரை கடும் போட்டி நிலவியது.
இடைவேளையில் 11-9 என முன்னிலை பெற்ற தாய்லாந்து ஜோடி, பின்னர் முன்னிலையை அதிகரித்து 21-14 என வெற்றி பெற்று முதல் சுற்றிலேயே இந்தியாவின் பட்டம் தக்கவைப்பு முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முன்னதாக, சீனாவுக்கு எதிரான ஆடவர் அணிப் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன்களான லியாங் வெய்கெங்–வாங் சாங் ஜோடியை சாத்விக்–சிராக் 21-11, 22-20 என வீழ்த்தியிருந்தனர். அந்த அணிப் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது.

