15 கடற்றொழில் மாவட்டங்களில் புதிய கண்காணிப்பு குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில், நாட்டின் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களில் விசேட மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சிலாபம், அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம், காலி, மாத்தறை, தங்காலை, களுத்துறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார், கடற்படையினர், கடலோரப் பாதுகாப்புப் படையினர், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *