திலித் ஜயவீர எம்.பி. சீனத் தூதுவருடன் சந்திப்பு!

சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை இன்று (04) கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை – சீனா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் இலங்கை இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையுடன் சீனா நீண்டகாலமாகப் பேணிவரும் நட்புறவையும், நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பையும் திலித் ஜயவீர எம்.பி பாராட்டியுள்ளார்.

அத்துடன், ”சீனா இலங்கையின் முக்கியமான நண்பன். எமது நாட்டுக்காக சீனா செய்துள்ள பங்களிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, அதற்குப் பதிலாக சீனா எம்மிடமிருந்து மிகக் குறைவாகவே எதிர்பார்த்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை – சீனா உறவு வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 50 ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சிப் பயணத்தில் சீனா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தொடர்பிலும் சீனத் தூதுவர் தனது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சர்வஜன பலய கட்சியின் தலைவர் மற்றும் பொலன்னறுவை மாவட்டத் தலைவருமான ரொஷான் ரணசிங்க, கட்சியின் உப தலைவர் மற்றும் கொழும்பு மாவட்டத் தலைவருமான வைத்தியர் சன்ன ஜயசுமன, இரத்தினபுரி மாவட்டத் தலைவரும் உப தலைவருமான காமினி வலேபொட உள்ளிட்ட கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், அனுராதா யஹம்பத், பிரதம செயற்பாட்டு அதிகாரி சட்டத்தரணி மதுர விதானகே, சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் இரங்க மெண்டிஸ் மற்றும் குருநாகல் மாவட்டத் தலைவர் அனுருத்த ஹேரத் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *