அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான விரிவுரையாளர், மாணவர்களின் பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார்.
இதனால், வெளியே முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்விப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியக விசேட பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை நேற்று வியாழக்கிழமை (01) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 55 வயதுடைய சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (02) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

