மொழிபெயர்ப்புக் கற்கையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்ற முதல் இளம் மாணவி குமார் யனிஸ்கா
பொத்துவில் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பொத்துவிலைச் சேர்ந்த மாணவி குமார் யனிஸ்கா, மொழிபெயர்ப்புக் கற்கையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்று கல்வியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த 2026.10.03ஆம் திகதி சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக கல்வி கற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ்மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி பயின்ற மாணவி குமார் யனிஸ்கா, தனது கல்விப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
2019/2020 கல்வியாண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட இவர், Bachelor of Arts Honours in Translation Studies (English/Tamil) எனும் இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
மேலும், பொத்துவில் பிரதேசத்தில் மொழிபெயர்ப்புக் கற்கையில் இவ்வகையான இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை குமார் யனிஸ்கா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் கல்வி கற்ற பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை தொடர்ந்த தனது கல்விப் பயணத்தின் ஊடாக, தனிப்பட்ட கல்வி முன்னேற்றத்தை மட்டுமன்றி பொத்துவில் மண்ணுக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியில் விடாமுயற்சியுடன் பயணித்து சிறப்புப் பட்டம் பெற்றுள்ள குமார் யனிஸ்காவின் இந்தச் சாதனை, பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு கல்வியில் முன்னேறுவதற்கான ஊக்கமாகவும், எதிர்கால மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.
கல்வியின் மூலம் தனது மண்ணின் பெயரை உயர்த்தியுள்ள குமார் யனிஸ்கா, எதிர்காலத்திலும் தனது கல்வி அறிவையும் மொழித் திறனையும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தி பல்வேறு உயரங்களை அடைய வேண்டும் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குமார் யனிஸ்காவின் இந்த சிறப்பான கல்விச் சாதனைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னும் பல உயரங்களைத் தொட்டு, கல்விப் பணியிலும் சமூகப் பணியிலும் சிறந்து விளங்கி, பொத்துவில் மண்ணுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்!

