பாலமீன்மடுவுக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு இரவு நேரங்களில் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்துதல் மற்றும் பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தரை நியமித்தல் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து பிரதேச செயலாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

பாலமீன்மடுவில் நேற்று (5) இடம்பெற்ற கட்சியின் வாராந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அம்புலன்ஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்து எழுத்துமூல கோரிக்கை முன்வைத்த நிலையில், நிரந்தரமாக அம்புலன்ஸ் மற்றும் சாரதியை வழங்க முடியாதெனவும், அவசரத் தேவையின் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து சுமார் 5 நிமிடங்களுக்குள் அம்புலன்ஸ் அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக நிரந்தர கிராம உத்தியோகத்தர் இல்லாததால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

தற்காலிகமாக கொக்குவில் கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் அலுவலகத்தில் இருப்பது தொடர்பில் தெளிவான நடைமுறை இல்லாததால் மக்கள் செலவழித்து தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, பாலமீன்மடு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிரந்தர கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *