யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சின்னங்கள் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் தோப்பு மற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளை புனரமைத்து பாதுகாப்பதற்கான பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் “மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இப்பணிகளுக்காக மொத்தம் 65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சங்கிலியன் அரண்மனைப் பகுதியை பாதுகாப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், வரலாற்று மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு நிகழ்வுடன் முடிவடையும் பணியல்ல எனவும், அவை எதிர்கால தலைமுறையினரிடம் கையளிக்கப்பட வேண்டிய பெறுமதிமிக்க சொத்துக்கள் எனவும் தெரிவித்தார்.

சங்கிலியன் தோப்பு மற்றும் அரண்மனைப் பகுதிகள் வெறுமனே பழைமையான கட்டடங்கள் அல்ல எனவும், அவை யாழ்ப்பாணத்தின் அரசியல் வரலாறு, தமிழர் ஆட்சிப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிக்கும் முக்கியமான மரபுரிமைத் தளங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புனரமைப்புப் பணிகளுடன் இத்தளங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இத்தளங்களை பாதுகாப்பதன் மூலம் எதிர்கால தலைமுறையினர் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பதுடன், பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *