ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், ஹெலசுவய நிறுவனத்தின் வழிநடத்தலில் “இறைவழி ஆரோக்கியப் பயணம்” எனும் தொனிப்பொருளில் நஞ்சற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (08) வியாழக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள், இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கைக்கே உரித்தான வாசனைத் திரவியங்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஐந்து வகையான ஓடதக் கஞ்சிகள், “ஔடத அத்திக்கா” பானம், பாரம்பரிய அரிசி வகைகள், இடியப்ப மா, பிட்டு மா, சமபோச உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களும் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
மேலும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையல் காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நஞ்சற்ற உணவு மற்றும் பாரம்பரிய உணவு முறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

