அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் கூட்டமாகச் சுற்றித்திரிவதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, பாடசாலைகளுக்குச் செல்லும் மற்றும் வீடு திரும்பும் மாணவர்கள், சிறுவர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் நாய்க்கடி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அவற்றைப் பொறுப்பின்றி வீதிகளில் நடமாட விடுவதும் இப்பிரச்சினைக்குக் காரணமாக அமைவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ஆலையடிவேம்பு பிரதேச சபையும் உரிய பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பேணவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

