சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!

மொறட்டுவை, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு 8.30 மணியளவில் சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வாடிக்கையாளரான பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த இனந்தெரியாத இருவர், T-56 ரக துப்பாக்கியால் உணவக உரிமையாளரை இலக்கு வைத்துச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் காரை நிறுத்திவிட்டு, வானத்தை நோக்கிச் சுட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளைக் கடத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் சித்தமுல்ல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸாரால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் இலக்கத் தகடும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் விழுந்து கிடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *