நுவரெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகலில் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கொத்மலை நீர்த்தேக்கத்துடன் சங்கமிக்கும் ஆக்ராஓயா ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதிய வேளையில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆக்ராஓயா ஆற்றை அண்டியுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அங்கிருந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அத்துடன், அம்பேவெல பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அம்பேவெல ரயில் நிலையப் பகுதியும், அதனை அண்டியுள்ள நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கின.
இதன் காரணமாக, அப்பாதையூடான வாகனப் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப் பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசநாயக்க தெரிவித்தார்.

