சாய்ந்தமருது பொல்லடிக் கலைஞருக்கு மாகாணத்தின் உயரிய விருது!

கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்படும் நாட்டாரியலுக்கான வித்தகர் விருது – 2026 சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட அண்ணாவியார், கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கலையான கோலாட்டம் எனப்படும் பொல்லடிக் கலையை முறையாகப் பயின்று, இளம் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்து வரும் இவர், சிறுவயது முதலே இக்கலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்.

பாரம்பரியப் பாடல்களுடன் பொல்லடி அடிகளுக்கு ஏற்ற சினிமாப் பாடல்களையும் இணைத்துப் பாடி, பார்வையாளர்களைக் கவரும் இவரது தனித்துவமான கலைத்திறன் கலை உலகில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த இவர், குடும்பச் சூழ்நிலைகளால் தனது கல்வியைத் தொடர முடியாத நிலையிலும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துள்ளார். ஐந்து பெண் பிள்ளைகளையும் ஓர் ஆண் பிள்ளையையும் கொண்ட குடும்பத்தின் தலைவரான இவர், தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

தனக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்புகளைத் தனது பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயற்பட்டு, தனது ஆறு பிள்ளைகளில் மூவரைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளார்.

குடும்பப் பொறுப்புகளையும் பொருளாதாரச் சவால்களையும் எதிர்கொண்ட நிலையிலும், கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தித் தனது கலைத்திறமையை வளர்த்துக்கொண்டு, நாட்டார் கலைத்துறையில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவரது நீண்டகாலக் கலைச்சேவைக்குக் கிடைத்த அரச அங்கீகாரமாகக் கருதப்படுவதுடன், சாய்ந்தமருது மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமையளிக்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் சிரேஷ்ட அண்ணாவியார் அபூபக்கர் இஸ்ஸதீனுக்கு கலைத்துறையினர் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *