காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை உரிய முறையில் கையாளும் நோக்கில் உள்ளக விவகாரப் பிரிவு (Internal Affairs Unit – IAU) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவை, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ். சில்மியா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். ரவூப் ஆகியோரின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
இப்பிரிவின் ஊடாக பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் தமது கருத்துக்களை உரிய வழிமுறைகளில் முன்வைக்க முடியும். கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைப் பரிசீலித்து, அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நேரடியாகப் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து அல்லது தொலைபேசி, மின்னஞ்சல், WhatsApp, உத்தியோகபூர்வ இணையத்தளம், QR குறியீடு, கடிதம் மற்றும் முறைப்பாட்டுப் பெட்டி ஆகிய வழிமுறைகளின் ஊடாகத் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
இதற்காக 065 222 6591 என்ற தொலைபேசி இலக்கத்திலும், 077 900 2891 என்ற WhatsApp இலக்கத்திலும் தொடர்புகொள்ள முடியும். மேலும், iau.divskattankudy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் www.kattankudy.ds.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.
முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும்போது சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வழங்குமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை முன்வைப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்களின் கருத்துக்களுக்கும் முறைப்பாடுகளுக்கும் உரிய கவனம் செலுத்தி, அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்துவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

