மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி. அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு நவம்பர் 16 வரை அழைப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ் உள்ளிட்ட ஏழு தனிநபர்கள் மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 21.09.2026 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து குறித்த  வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா,  உட்பட 6 பேர் ஆஜராகினர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, சார்பில் சட்டத்தரணி கௌசல்யா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் ஹபீப் முகமது, முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம்,  சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதேவேளை இந்த வழக்கு விசாரணையில் சிலர் காரணம் காட்டியிருந்தனர் அருச்சுனா உட்பட சிலர் காரணம் காட்டுவதற்கான காலம் கேட்டிருந்தனர் அதேவேளை  5ம் எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார் நீதிமன்ற அழைப்பானை கிடைக்கப் பெறாவிட்டாலும் நீதிமன்றில் ஆஜராகி நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைக்கு தாங்கள் ஒழுகுவதாகவும் அதற்கமைய இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி சமர்ப்பணம் செய்துள்ளார்.

இதையடுத்து காரணம் காட்டாததை காரணம் காட்டுவதற்காக எதிர்வரும் 16ம் திகதி வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *