ஸ்ரீலங்கன் விமானத்தின் அவசரத் தரையிறக்கத்திற்கான காரணம் வெளியானது!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, நேற்றிரவு 10.38 அளவில் கட்டுநாயக்கவை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-605 என்ற ஏ-330 (A-330) வகை விமானத்திலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அவசர நிலைமை குறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலைய இயக்க அறைக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவசரமாகத் தரையிறக்கும் நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மீட்புப் படையினர், அம்பியூலன்ஸ்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தீவிர எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டன.

எனினும், விமானியின் திறமையான கையாளுகையினால் எந்தவித விபத்துமின்றி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 258 பயணிகளும், 15 விமானக் குழுவினரும் அடங்கலாக 273 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில், சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இறைச்சித் தொகைக்கு இடப்பட்டிருந்த நைதரசன் உலர் பனிக்கட்டி (Dry Ice) காரணமாகவே இந்த புகைமூட்டம் உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் மேலதிக சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், இன்று (2) காலை வேறொரு இலக்கை நோக்கி விமானம் கட்டுநாயக்கவிலிருந்து வெற்றிகரமாகப் புறப்பட்டுச் சென்றதாக தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *