மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியா தனது இராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு எதிரான ஹவுதி அமைப்பினரின் தாக்குதல்கள் தொடர்பில் ஜோர்டான் உள்ளிட்ட அண்டை நாடுகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அதேவேளை, சீனா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடனும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் சவூதி அரேபியா ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிடையில், வளைகுடா கடற்பரப்பில் கத்தாருக்குச் சொந்தமான ‘அல் மயேடா’ எல்.என்.ஜி. கப்பல் மீதான தாக்குதலுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கத்தாருக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தப் கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பையும் தடையற்ற போக்குவரத்தையும் உறுதிப்படுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் நடைபெற்ற ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஓரமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் சவூதி வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தணித்து, பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதே இந்த இராஜதந்திர முயற்சிகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

