நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையினை இன்று (12) பாராளுமன்றில் நிகழ்த்தவுள்ளார்.
இது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.
2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் 7ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்தவினால் முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, 2027ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 4,992 பில்லியன் ரூபாவாகும்.
மிக அதிகபட்ச ஒதுக்கீடாக, ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கு 856 பில்லியன் ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுக்கு 590 பில்லியன் ரூபாவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 500 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 458 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 328 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டிற்கான வருமானக் கணிப்புகள், நிதிக் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்த விவரங்களை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 அன்று மாலை 6.00 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்களுக்கு நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது, ஒதுக்கப்பட்ட விவாத நேரத்தில் 60 சதவீதம் ஆளுங்கட்சிக்கும் 40 சதவீதம் எதிர்க்கட்சிக்கும் வழங்கப்படும்.
இருப்பினும், குழுநிலை விவாதத்தின் போது, 40 சதவீத நேரம் ஆளுங்கட்சிக்கும் 60 சதவீத நேரம் எதிர்க்கட்சிக்கும் வழங்கப்படும்.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் 2027 வரவு செலவுத் திட்ட யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்படி, ‘டித்வா’ பேரழிவு (மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சரியான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கண்டிப்பான நிதி ஒழுக்கமே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.
2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டு இலக்கிலிருந்து பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றியமைக்கும் அபிவிருத்தியை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

