இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, புதிய அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என கூட்டணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் (OCB) ஆகியவற்றினால் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் ஜனநாயகப் போராட்டங்களும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.
அத்துடன், காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மாகாண சபைத் தேர்தல் தாமதம் மற்றும் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளும் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் கனடா தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். உத்தேச சட்டங்கள் தொடர்பான கரிசனைகளையும் இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களிலும் கனடா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

