நாட்டில் 80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குப் பதிலாகத் தொடர்ச்சியாகப் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக அரசாங்கம் கூறி வருவது முரண்பாடானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (14) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்களின்படி, உயர்கல்வித் தகைமை பெற்றவர்களிடையே தெற்காசியாவிலேயே அதிகூடிய வேலையின்மை வீதமான 43 சதவீதம் இலங்கையில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பல தசாப்தங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் பலர், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலையின்மை காரணமாக 80,000க்கும் அதிகமான பட்டதாரிகள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்த அவர், குறித்த பட்டதாரிகளைப் பயிலுநர்களாக அரச சேவையில் இணைத்து, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற மாதாந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், அவர்களின் கல்வித் தகைமை மற்றும் திறன்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகளை வழங்கி, உரிய துறைகளில் திறமைகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கடந்த மூன்று தேர்தல்களிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்த வேலையில்லாப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், குறைந்தபட்சம் பயிலுநர் நியமனங்களையாவது வழங்கி அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

