அநுராதபுரத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரசாங்கத்தின் வழிநடத்தலில் பொலிஸாரின் அனுசரணையுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற சம்பவத்தை யார் முன்னெடுத்தார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்த அவர், காலி முகத்திடல் போராட்டத்தின்போது ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைப் போன்றே, அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களும் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களம், முப்படைகள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகள் இருந்தும் இவ்வாறான மோதல்களைத் தடுக்க முடியாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பிய அவர், சம்பவத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஆயுதமற்ற தேரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் காணொளி ஆதாரங்கள் இருந்தும் இதுவரை ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், குறித்த ஆதாரங்களைப் பொலிஸார் ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தமக்கும் உலப்பனே தேரருக்கும் எதிராக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், தொலைபேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மிஹிந்தலை புனித பூமி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் தேரர்கள், பிக்குணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அங்கு தாக்குதல் அல்லது அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

