இந்தியாவில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக, சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, மாற்றுச் சந்தைகளைத் தேடுவதற்கும், பண்டிகைக் காலங்களில் நாட்டிற்குத் தேவையான பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கும் இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், காய்ந்த மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களையும் எவ்வித தடையுமின்றி உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
காய்ந்த மிளகாய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினை அதன் ஈரப்பதத்தின் சதவீதம் அதிகரித்துள்ளமையே எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தர நிர்ணய நிறுவனத்தின் தரநிலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அளவுகோல்களின்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் தொகைகளை விடுவிப்பதற்கு அவற்றின் ஈரப்பதத்தின் அளவு 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இருப்பினும், இந்தியாவில் நிலவும் கடும் மழைவீழ்ச்சி மற்றும் எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாகச் சில காய்ந்த மிளகாய் தொகைகளில் ஈரப்பதத்தின் அளவு 13 முதல் 14 சதவீதம் வரை காணப்படுவதால், குறித்த மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது சந்தையில் ஏற்பட்டுள்ள மிளகாய் தட்டுப்பாடு அல்ல என்றும், தரநிலைகளுக்கு அமைவாகப் பொருட்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வரவுள்ள மிளகாய் தொகைகளிலும் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், எதிர்வரும் மார்ச் மாதம் வரை நடைமுறைப்படுத்தக்கூடிய இடைக்கால வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருட்களின் விநியோகச் சிக்கல்களைப் பயன்படுத்தி வியாபாரிகள் நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்த முற்பட்டால், அதற்கு எதிராக அரசாங்கம் தலையிடும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்கப்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், தேவையற்ற விதத்தில் விலைக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதுள்ள விநியோகச் சிக்கல்களைத் தவறாகப் பயன்படுத்தி நுகர்வோரைச் சுரண்டுவதற்கு வியாபாரிகள் முற்பட்டால், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக உரிய நடவடிக்கை எடுத்து, கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

