கடற்றொழில் துறைக்கு வரலாற்றில் அதிகூடிய நிதி ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் துறைக்கு 24,024.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் கீழ், கடற்றொழில் அமைச்சு தொடர்பான விவாதம் இன்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை 50 சதவீதத்திற்கும் அதிகமான மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்கால வரலாற்றில் கடற்றொழில் துறைக்கு ஒதுக்கப்பட்ட அதிகூடிய நிதி இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.

 

கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்வதுடன், நாட்டின் புரத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் யான் ஓயா நீர்த்தேக்கத்தில் முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கூண்டு முறையிலான மீன் வளர்ப்புத் திட்டத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு உள்நாட்டு நீர்த்தேக்கங்களில் 175 மீன் வளர்ப்புக் கூண்டுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அத்துடன், கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மயிலிட்டி உள்ளிட்ட பல மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மீனவர் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை இரண்டு மில்லியன் ரூபாயாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027 ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் நிதி நெருக்கடிகளைத் தீர்த்தல், மீன் சந்தைகளை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

 

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, கடற்றொழில் துறையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பை மேலும் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *