மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு.!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு, மன அழுத்தமற்ற வேலைத்தளமும் ஆரோக்கியமான மனமும் ஒவ்வொரு ஆணினதும் உரிமை எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு இன்று சனிக்கிழமை (28.11.2026) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வொய்ஸ் ஒப் மென் நிறுவனத்தின் அனுசரணையில், மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் உலக நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் பணிப்பாளர் ஏ. கங்காதரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், சிவஸ்ரீ சி. குகநாத ஐயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா, ஓய்வுநிலை அதிபர் சா. மதிசுதன், கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவர் த. இன்பராசா மற்றும் உலக நண்பர்கள் செயற்றிட்டப் பணிப்பாளர் சாந்தகுமார் ஆகிய நால்வருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், ஊடகம், கல்வி, கலை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றிவரும் பத்துப் பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன், ஆண்களின் மனநல ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டிலா அல்லது பணியிடத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

ஆண்களின் மனநலம், உரிமைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *