இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 944 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கமைய வீதி விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களாக நாட்டில் பதிவாகும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 944 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (18) வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 26 ஆயிரத்து 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் ஆயிரத்து 377 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விதிமுறைகளை மீறி பொறுப்பற்ற வகையில் செயல்படும் சாரதிகளினாலேயே வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
எனவே பொலிஸார் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாத்திரம் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்க முடியாது. பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வீதி விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை செலுத்துமாறு அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.