ஐபிஎல் 18ஆவது அத்தியாயத்தில் லக்னோவ் சுப்பர் கிங்ஸ் 33 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐபிஎல் 18ஆவது அத்தியாயத்தில் அணிகள் நிலையில் 18 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸை அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று(22) இரவு எதிர்த்தாடிய லக்னோவ் சுப்பர் கிங்ஸ் 33 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

ஏற்கனவே ப்ளே ஓவ் வாய்ப்பை இழந்திருந்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸுக்கு இது ஆறுதல் தரும் வெற்றியாகவே அமைந்தது.

அதேவேளை, ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸுக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததுடன் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்தது.

லக்னோவின் முன்வரிசை வீரர்கள் மூவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தனர்.

ஏய்டன் மார்க்ராம், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் 59 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மார்க்ராம் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

பத்து ஓவர்கள் நிறைவில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த பத்து ஓவர்களில் 138 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.

மிச்செல் மார்ஷ், நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 51 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிச்செல் மார்ஷ் 64 பந்துகளில் 10 பவுண்டறிகள். 8 சிக்ஸ்களுடன் 117 ஓட்டங்களை விளாசினார்.

நிக்கலஸ் பூரண் 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 56 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் 6 பந்துகளில் 2 சிக்ஸ்கள் உட்பட 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

236 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சாய் சுதர்சனும் அணித் தலைவர் ஷுப்மான் கில்லும் 27 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

சாய் சுதர்சன் கவனக்குறைவான அடி தெரிவினால் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது ஷுப்மான் கில் 7 பவுண்டறிகளுடன் 35 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

மறு பக்கத்தில் அதிரடியாகத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஜொஸ் பட்லர் 18 பந்துகளில் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும்  குஜராத் டைட்டன்ஸ் நெருக்கடிக்குள்ளானது.

ஆனால், ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட், ஷாருக் கான் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 22 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவரது விக்கெட் உட்பட 6 விக்கெட்கள் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததுடன் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியைத் தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *