அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பான அமைப்பின் உருவாக்கம் உண்மைக்குப் புறம்பானது

ஏறாவூரில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பான அமைப்பின் உருவாக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வெளியீடு என்பன உண்மைக்குப் புறம்பானவை என்பதை உறுதிப்படுத்தல்

 

கடந்த 20ம் திகதி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நடாத்திய ஊடக சந்திப்பின் போது, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம் வெளியீடு, நாட்டின் சட்டங்களுக்கு முரணான கடந்த கால நிகழ்வுகள், “லிபியா கடாபி” எனும் பெயரிலான அமைப்பின் தோற்றம், இனவாத, அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக

முன்வைக்கப்பட்ட தகவல்கள் யாவும் உண்மைக்குப் புறம்பானவை என்றும்,

 

இவ்வாறான நிகழ்வுகள், சமூக விரோதச் செயல்கள், மார்க்க வரம்பு மீறல்கள், நாட்டின் சட்டத்திற்கு எதிரான அடிப்படைவாத குழுச் செயற்பாடுகள் எமது பிரதேசத்தில் வரலாறு நெடுகிலும் எங்கும் இடம்பெறவில்லை என்றும்,

 

எமதூரில் சூபிஸ அமைப்பு என்ற பெயரிலோ, லிபியா கடாபி என்ற பெயரிலோ எந்த அமைப்பும் தோற்றம் பெறவில்லை என்றும், எந்த ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் தவறான துண்டுப்பிரசுரங்கள் பகிரப்படவில்லை என்றும் எமதூரின் தலைமைத்துவ சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஏறாவூர் கிளை உறுதிப்படுத்துகின்றது.

 

மேற்படி கலகொட அத்த ஞானசார தேரர் மூலம் முன் வைக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எமதூரின் ஒற்றுமையையும் சமூக ஐக்கியத்தை சீர்குழைப்பதுடன் நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்தவல்லது. இதனால் எமது பிரதேசத்தின் தனித்துவம், மக்களின் உணர்வுகள், சமய ரீதியான அன்றாட செயற்பாடுகள் தாக்கமுற்றிருப்பதுடன், எமது நாட்டில் மீண்டுமொரு தடவை இன முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையினை வண்மையாக கண்டிக்கின்றோம்.

 

குறித்த ஊடக அறிக்கையானது, எமது பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாயல் பரிபாலன சபை உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரொலியாக பகை தீர்க்கும் வன்ம உணர்வுடன் புனையப்பட்ட ஒன்றாகும்.

 

எமது பிரதேசத்திற்கு இழுக்கை ஏற்படுத்திய சகோதரர்களின் இந்நாசகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதுடன்,

சில மாதங்களுக்கு முன்னர் யூ டியூப் சமூக வலைத்தளத்தில் குறித்த பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் பலரை போதை விற்பனையில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, மிக இழிவாக அபகீர்த்தியை ஏற்படுத்தி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறான ஊகங்கள், முறையான விசாரணைகள் இன்றி வெளியிடப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் நாட்டில் ஐக்கியம், சமுக புரிந்துணர்வு, ஒரு சமூகத்தின் மார்க்க விழுமியங்கள் மீதான அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும்.

எனவே, ஞானசார தேரர் அவர்களால் பேசப்பட்ட விடயங்களை முற்றாக மறுப்பதுடன் எமது விசனத்தை தெரிவிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *