மகிழவெட்டுவான் பாலம் 2 வருடமாகியும் புனரமைக்கப்படவில்லை; பொது மக்கள் விசனம்

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 

இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொதுப் போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது அந்த பாலம் வரை சென்று நிறுத்தப்பட்டதும் பயணிகள் பஸ்வண்டியில் இருந்து இறங்கி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் பல்வேறு கஸ்டங்கள் மத்தியில் நடந்து பாலத்தை கடந்து சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நடந்து பாடசாலைக்கு மற்றும் வீடு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசங்களுக்கு மக்கள் ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சுற்றி பிரயாணிக்க வேண்டியுள்ளதுடன் இந்த உடைந்த பாலத்தை புனரமைக்குமாறு அதற்கு அருகில் சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் தற்காலிகமாக ஒரு பாலத்தை அமைத்தனர்.

 

அதுவும் மழை வெள்ளத்தினால் உடைந்து பிரயாணிக்க முடியாமல் உள்ளது.

 

 

இந்த நிலையில் மக்கள் நகரில் இருந்து வேறு பிரதேசங்களுக்கோ அந்த பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பிரயாணிக்கவோ வவுணதீவு, ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சுற்றி பிராணிக்க வேண்டியுள்ளது.

 

இது தொடர்பாக அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்து இதுவரை எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

எனவே இந்த பாலம் உடைந்து வீழ்ந்ததால் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இது தொடர்பாக அரசியல் வாதிகளுக்கு தெரிந்தும் தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டு வந்த அரசியல்வாதிகள் கூட இதுவரை இந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 3ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை வசதியான இந்த போக்குவரத்தை கூட செய்யாது பாராமுகமாக இருக்கின்றனர்.

 

எனவே இந்த பாலத்தை புனரமைக்காது எந்த அரசியல்வாதிகள் வந்தாலும் அவர்களை பிடித்து பாலத்தில் கட்டிப்போடுவோம்.

 

அவ்வாறே அரச அதிகாரிகளும் செயற்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதேவேளை நகரின் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் பஸ்வண்டியில் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு கடமைக்கு சென்று கைவிரல் அடையாளம் இட முடியாததையடுத்து அவர்களுக்கு  அரை நாள் லீவு ஏற்பட்டு வருகின்றதாகவும் உரிய நேரத்துக்கு கடமைக்கு செல்லமுடியாது கஸ்டங்களை கடந்த இரண்டு வருடங்களாக எதிர்நோக்கி வருவதாகவும் பாடசாலை முடிந்ததும் 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் பஸ்வண்டியை பிடிக்க ஏனைய ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிளில் அல்லது நடந்து பாலம் வரை வரவேண்டியுள்ளது என ஆசிரியர்கள் கடும் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *