இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை(திருத்தம்) சட்டமூல குழு விவாதம் நேற்று(23) நடைபெற்றது.
இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காமப் பிரதேசத்தில் சுமார் 18000 மக்கள் வாழ்கின்றனர். இதில் 94% மான சுமார் 17000 க்கும் மேற்பட்ட மக்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டுள்ளனர்.
12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதான இறக்காமப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமானது 2012 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் காணப்பட்டதோடு பின்னர் அது அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் எவ்வித அறிவித்தலும் இன்றி மாற்றப்பட்டு இருந்தது.
சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்டக் அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட இறக்காமப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசம் இணைக்கப்பட்டமையானது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயலாகும்.
அத்தோடு இப் பிரதேசத்தில் வாழ்கின்ற 94% மான தமிழ் பேசும் மக்கள் அம்பாறை நீதிமன்றங்களில் தமது வழக்கு நடவடிக்கைகளை தமக்கு பரீட்சயமற்ற சிங்கள மொழியில் தாக்கல் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்தோடு வழக்கு நடவடிக்கைகளைக் கையாள்வதிலும் சிரமப்படுகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமிழில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்வதற்காக வழக்குச் செலவுக்கு மேலதிகமாக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு வழக்கு நடவடிக்கைகளின் போதும் சாட்சியங்களின் போதும் நீதிமன்றின் பெறுமதியான நேரத்தை மொழிபெயர்ப்புக்காக செலவிட வேண்டிய துரதிஷ்டவசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
இறக்காமப் பிரதேசமானது புவியியல் ரீதியாக சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கும் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்திற்கும் இடையில் அமையப் பெற்ற பிரதேசமாகும்.
சிங்கள மொழியிலான அம்பாறை நீதி நிர்வாக வலயத்தினுள் இக்கினியாகல, உகன, தமன, மங்கலகம, மத்தியமுகாம், பக்கியல்ல மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகள் அடங்குகின்றன.
இதில் ஒரே ஒரு தமிழ் பேசுகின்ற மக்களைக் கொண்ட இறக்காமப் பிரதேசமானது பொருத்தமற்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியிலான அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தினுள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் உள்ளடங்குகின்றன.
எனவே தான் தமிழ் பேசுகின்ற மக்களைக் கொண்ட இறக்காமப் பிரதேசமானது தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இறக்காமப் பிரதேசத்திற்கான தனியான நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.