தையிட்டியில் பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டனர்  

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் பேருந்துகளில் கொண்டுவரப்படவுள்ளனர்.

 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றும் போராட்டம் நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள், பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது.

 

குறித்த கட்டளையின் படி, பலாலி பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட /250 தையிட்டி கிராமசேவையாளர் பிரிவில் உள்ள திஸ்ஸ மகாராம பெளத்த விகாரையில் மேற்படி பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களினாலோ ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றும் ஆர்ப்பட்டக்கரர்களினாலோ வழிபாட்டு இடத்திலோ அல்லது பிரதான நுழைவாயிலோ அல்லது வீதியிலோ வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ விகாரையில் நடைபெறும் உற்சவத்திற்கோ விகாரையின் உடமைகளுக்கும் எந்தவித இடையூறும் மற்றும் சேதங்களை ஏற்படுத்தக் கூடாது எனவும் 09,10,11 ஆகிய தினங்களில் சட்டவிரோத ஆர்ப்பாட்டமோ அல்லது சட்டவிரோத ஊர்வலமோ அல்லது சட்டவிரோத கூட்டமோ அல்லது எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது எனவும் பலாலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் பல்வேறு பகுதிகளிலிருந்து திஸ்ஸ விகாரைக்கு வழிபாட்டிற்க்கு வருகைதரும் மக்களுக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் இனமதரீதியிலான சமாதான சீர்குலைவுகள் ஏற்படக்கூடும் என்ற வேண்டுகோளுக்கு அமைய பல்வேறு பகுதிகளிலிருந்து திஸ்ஸ விகாரைக்கு வழிபாட்டிற்க்கு வருகைதரும் மக்கள் கலைவாணி வீதிக்கு பதிலாக” பொலிஸாரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்லூரி பாதையினை பயன்படுத்துமாறு மன்றினால் குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவை பிரிவு 106(3) இன் கீழ் இடைக்கால கட்டளையாக்கப்படுகின்றது.-என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *