அட்டாளைச்சேனை உப அலுவலகத்தை டிப்போவாக தரமுயர்த்துமாறு உதுமாலெப்பை கோரிக்கை

இலங்கை மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்துவது தொடர்பான அறிக்கையினை வழங்குமாறு மின்சார அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபாலவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மின்வலு அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நீண்டகாலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வருகின்ற மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையிலு,

 

அட்டாளைச்சேனையில் 1994 ம் ஆண்டில் இருந்து இலங்கை மின்சார சபையின் உப அலுவலகம் இயங்கி வருகின்றது.

 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அட்டாளைச்சேனை மின்சார சபை உப அலுவலகத்தின் அதிகாரிகளை வேறு மின்சார சபை அலுவலகத்தில் கடமை புரியுமாறு பணிப்புரை வழங்கப்பட்டது.

 

அட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் மட்டும் காரியாலயத்தில் சில காலம் கடமை புரிந்து வந்தார்.

 

இதன் பின் இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளரிடம் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

 

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக தெரிவித்தோம்.

 

இதன் பின் வேறு காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலக உத்தியோகத்தர்களை மீண்டும் அட்டாளைச்சேனை உப அலுவலகத்திற்கு கடமைக்கு வந்துள்ளனர்.

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், ஒலுவில் மீன்பிடித்துறைமுகம், தேசிய கல்விக் கல்லூரி, அரசாங்க ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி உட்பட பல முக்கிய அரச நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப-அலுவலகப் பிரதேசம் 6100 ஹெக்டர் நிலப்பரப்புள்ள பிரதேசமாகும். அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி பிரதேசங்களில் 55 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன

 

எனவே அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக மின்வழு அமைச்சர் குமார ஜயக்கொடி அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மின்சார சபையின் உப-அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்தும் செயற்பாடுகள் தொடர்பாக மின்வழு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அறிக்கைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

 

அட்டாளைச்சேனையில் நீண்டகாலமாக இயங்கிய உப அலுவலகத்தில் கடமை புரிந்த உத்தியோகத்தர்களை வேறு காரியாலத்திற்கு அழைத்து உப அலுவலகத்தை இயங்காமல் செயற்பட்டவர்களுக்கு எதிராக இலங்கை மின்சார சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

 

இலங்கை மின்சார சபையின் சூரிய மின் கலம் பொருத்தியுள்ள முதலீட்டாளர்களின் கொடுப்பனவுகளில் கிழக்கு மாகாணத்தில் முரண்பாடுகள் நிலவுகின்றன.

 

கடந்த பல வருடங்களாக இலங்கை மின்சார சபையுடன் ஒப்பந்தத்தை செய்து நாட்டுக்குத் தேவையான சூழலுக்கு பாதிப்பற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் மின்கலம் பொறுத்தியுள்ள முதலீட்டாளர்களின் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாடான கொடுப்பனவு , அதிகமான பராமரிப்பு செலவு இலங்கை மின்சார சபையினது உயர் மின் அழுத்தங்களின் போது ஏற்படும் பாதிப்புகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் உரிய நேரத்திற்கு கொடுப்பனவுகளை வழங்காமை இவ்வாறான கடினமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூரிய மின்கல உற்பத்தியாளர்கள் இலங்கை மின்சார சபையினது காலத்திற்கு காலம் மாற்றப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஆரம்ப காலத்தில் இக்கட்டான பொருளாதார நிலைகளுக்கு மத்தியில் முதலீடு செய்தவர்களும் முதல் 7 வருடங்கள் அலகு ஒன்றிற்கு 22 ரூபாவும் 7 வருடங்களின் பின்னர் 15.50 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது.

 

இருப்பினும் ஏனையவர்களுக்கு 37, 27 ரூபா 20 வருடத்துக்கும் என வேறு தொகைகளில் வழங்கப்படுகிறது.

 

கிழக்கு மாகாணத்தில் சூரிய மின்கலம் பொருத்துவதற்கான புதிய முதலீட்டாளர்கள் 5000 பேர் இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பம் செய்த போதும் ரான்ஸ்போமர்கள் பொருத்தப்படாததால் சூரிய மின்கலம் பொருத்தும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலமை கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்றன.

 

எனவே கிழக்கு மாகாணத்தில் ரான்ஸ்போமர்களை பொருத்துவதற்கான விஷேட எற்பாடுகளை மின்வழு அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

 

மேலும் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அருகம்பே பிரதேசம் உல்லாசத் துறைக்கான பிரதேசமாகும்.

 

இந்த பிரதேசத்தில் பல ஹோட்டல்கள் அமைக்கப்பட்டும் இது வரையும் த்ரீ பேஸ் மின்சாரம் பொருத்துவதற்கு விண்ணப்பம் செய்தும் மின்சார இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளதாக பொத்துவில் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்கின்றனர்.

 

எனவே பொத்துவில் பிரதேசத்தில் புது ரான்ஸ்போமர்களை பொருத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *