மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலதத்தில் இன்று(18) இடம்பெற்றது.
மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பிலிருந்து இப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு யுஎன் ஹபிடட் நிறுவனத்தினால் 15 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதி அனுசரனையின் கீழ் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் அதிகளவு வெள்ள அனர்த்த பாதிப்பை எதிர்கொள்ளும் மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகின்றது.
இதனை முன்னிட்டு வெள்ளப்பாதிப்பை குறைப்பதற்கான உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.
முந்தானையாறு மற்றும் மாதுரு ஓயாவில் இருந்து சடுதியான வெள்ள நீர் வரத்து காரணமாக மாவட்டத்தில் அதிகளவான தாழ்நில பிரதேசங்களில் அழிவுகள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் பாதிக்கப்பட்டன.
மேலும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கு முன்னாயத்த பொறிமுறை ஒன்றை அமைத்தல் தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப அறிவைப் பெற்று மாவட்டத்தில் செயற்படவுள்ளனர்.
களப்புகளில் அதிகளவான வண்டல் மண் தேங்கியுள்ளமையினால் வெள்ள நீர் ஒட்டம் தடைப்படுவதாக இதன் போது நிபுணர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஆற்றுவாயினை முகாமைத்துவம் செய்வதனால் நீர் இருப்பை உறுதிப்படுத்துவதுடன் சூழல் நேயமிகு உயிர்ப்பல்வகைமையையும் பாதுகாக்க முடியும் என கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மாவட்டத்தில் இயற்கையாகவே வெள்ள நீர் வடிந்தோடும் தோனாக்கள் மூடப்பட்டுஅ காணப்படுவது மட்டுமல்லாது சட்டவிரோத நில அபகரிப்புக் காரணமாக வெள்ள நீர் கடலில் செல்வது தடைப்பட்டு உள்ளது.
இக் கலந்துரையாடலின் போது பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், பொறியாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மற்றும் விவசாய அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 35,000க்கு அதிகமான குடும்பத்தினர் இடம்பெயர்ந்ததுடன் அண்ணளவாக 55 000 ஹெக்டயருக்கு அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் சுமார் 3.3 பில்லியன் இழப்புக்கள் ஏற்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


