யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று(20) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று காலை பத்து மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதி வேண்டும், நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம், ஐநா செவி கொடு, ஜனாதிபதி கண்விழி, மனித உரிமையை பாதுகாப்பீர், புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள், விசாரணையை துரிதப்படுத்து, செம்மணிக்கு ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பினர், பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழியை பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


