வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம்

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.04.2025) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர் தூய்மையான இலங்கை செயற்றிட்டம் எமது மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டங்களை அமைச்சுக்களின் செயலாளர்கள் தயாரிக்கவேண்டும்.
ஒவ்வொரு திணைக்களத் தலைவர்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் கடமைநேரம், வரவுகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.
பொதுமகன் அலுவலகத்துக்கு வந்து அலுவலர்களுக்காக காத்திருக்கக்கூடாது அதேநேரம் டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தையும் படிப்படியாக நாம் ஆரம்பிக்கவேண்டும்.
2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் நிதி முன்னேற்றம் தொடர்பில் மாத்திரமே வடக்கு மாகாண சபையின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி முன்னேற்றத்துடன் பௌதீக முன்னேற்றத்தையும் இணையத்தளத்தில் வெளியிடவேண்டும்.
திட்டங்களை அடையாளப்படுத்தும்போது யாராவது சொல்வதையோ, ஒளிப்படங்களில் பார்ப்பதையோ விட ஓரிடத்தை நேரில் சென்று பார்வையிட்டால்தான் அந்தத் திட்டத்தை செய்ய முடியுமா இல்லையா என்பது தெரியவரும். பின்தங்கிய பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டால்தான் அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே திணைக்களத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சுழற்சிமுறையில் பின்தங்கிய கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுங்கள்.
2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களின் முன்மொழிவுகளை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நாம் சமர்ப்பிக்கவேண்டியுள்ளது. எனவே அதற்கான திட்டமிடல்களையும் இப்போதே ஆரம்பியுங்கள். குறிப்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம் என்பன எவ்வளவு நிதி கிடைத்தால் வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை அடையாளப்படுத்தவேண்டும் என்றார் ஆளுநர்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்துக்குள் செலவு செய்து முடிக்கவேண்டும். கட்டடங்கள் திணைக்களம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள். திணைக்களத் தலைவர்களும், அமைச்சின் செயலாளர்களும் சரியான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யவேண்டும், என்றார்.
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாசன், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறைவளவான கட்டுநிதியே விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சில திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான நிதியை வழங்க முடியாமல் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றோம். எனவே இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு நிதி விடுவிப்பார்கள், எப்படி விடுவிப்பார்கள் என்பது தொடர்பான தெளிவான திட்டவரைவு தேவை எனவும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு, வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சு, வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு, வடக்கு மாகாண  மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு ஆகிய 5 அமைச்சுக்களினதும் அதன் கீழான திணைக்களங்களினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன.
இதன்போது திட்டநடைமுறையாகத்தில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டன அது தொடர்பான பொருத்தமான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *