ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “இலங்கையை சுத்தமாகவும், பசுமையாகவும் மற்றும் சுகாதாரமாகவும் மாற்றுதல்” எனும் வேலைத்திட்டம் மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள 09 நிறுவனங்களும் அகில இலங்கை ரீதியாக 311 நிலையங்களில் நேற்று(04) முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நைட்டாவி மாவட்ட காரியாலயங்களான கல்முனையிலும், அம்பாறையிலும், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்திலுமாக 3 இடங்களிலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை காரியாலயத்தில் நைட்டாவின் தொழிற்பயிற்சி உத்தியோகத்தர் எம். இராசமோகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ், கல்முனை பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், நைட்டா உத்தியோகத்தர்கள், பயிலுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தேசியக் கொடி மற்றும் நைட்டா கொடிகள் ஏற்றப்பட்டதுடன் உள்ளக மற்றும் வெளியக சுத்தத்திற்காக மாபெரும் சிரமதானம் இடம்பெற்றதுடன் இதனை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட எஸ். இம்தியாஸ் ஆரம்பித்து வைத்தார்.
நைட்டாவானது அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் வண்ணம் சுமார் 50 க்கும் மேற்பட்ட தொழிற்துறைகளை மையப்படுத்தி என்விகியு சான்றிதழ்களை வழங்குவதனூடாக அவர்களின் தொழில் வாய்ப்பை உறுதிப்படுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் தற்போது மருத்துவத்துறை, சுற்றுலாத்துறை, கனரக வாகனத்துறை, மின்னியல் துறை என வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறைகளில் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு வருகிறது. தொழில் வாய்ப்பற்ற மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இளைஞர்கள் நைட்டா கல்முனை காரியாலயத்தை தொடர்பு கொள்ளவும்.


