யாழ்ப்பாணம் மருதங்கேணி பொதுச் சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியை அழைத்த வேளை நோயாளர் வண்டி சாரதி வரவில்லை என நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்காக நபர் ஒருவர் இன்று(07) சென்றுள்ளார்.
காய்கறிகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்ற பொழுது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்து ஓடியது.
அதனை அவதானித்த பொதுமகன் ஒருவன் உடனடியாக அருகில் உள்ள மருதங்கேணி வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை எடுத்து கூறியதுடன் நோயாளர் காவு வண்டியையும் உதவிக்கு அழைத்துள்ளார்.
இப்போது நோயாளர் காவு வண்டியை வைத்தியரின் அனுமதியின்றி விட முடியாது என்றும் வைத்தியர் தூங்குவதாகவும் நோயாளர் வண்டி சாரதி தெரிவித்திருந்தார்.
அத்துடன் 1990 என்னும் அவசர இலக்கத்திற்கு அழைத்து வேறு நோயாளர் காவு வண்டியை அழைக்குமாறும் மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி சாரதியால் கூறப்பட்டதால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றுவதற்காக 1990 இலக்கத்திற்கு அழைத்து நோயாளர் காவு வண்டியை வரவழைத்ததாக குறித்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்

